கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது.

இந்தியாவில் 4,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, 21 நாள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு, 2.9 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 22.4 கோடி ரூபாய்) நிதி வழங்குவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு இந்த நிதியை தனது உதவி நிறுவனமான யு.எஸ்.ஐ.ஐ.டி., மூலம் வழங்குகிறது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கென்னத் ஜஸ்டர் கூறுகையில் 'இந்த நிதி, கொரோனா வைரசை எதிர்த்து போராட உதவியாக இருக்கும்' என்றார்.


கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதில் சுகாதாரத்திற்கு மட்டும் 1.4 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 'கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மாத்திரைகளை தந்து உதவ வேண்டும்' என இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.