சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், இந்த தேர்வு, மே, 3ல் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நேற்று முதல் வெளியிடப்படுவதாகவும் இருந்தது. கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மே, 3ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்த, நீட் நுழைவு தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை சார்பில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.